×

ரூல்ஸ் போட்டு நோகடிக்கும் அதிகாரியை மாற்ற கோரும் புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எந்த நல்ல திட்டம் கொண்டு வந்தாலும் அதில் விதிகளை நுழைத்து திட்டத்தை நீர்த்து போகச் செய்யும் அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை புல்லட்சாமி தனது தொகுதியில் கடந்த மாதம் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக பதிமூன்றாயிரம் பேருக்கு உதவித்தொகை கிடைக்கும் என தகவல்கள் வெளியானது. அதன்பிறகு 73 ஆயிரம் மகளிருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கோப்புகள் பவர்புல் பெண்மணி வழியாக தலைமை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். அதற்கான திட்டம் இங்கே இருக்கிறது.. பணம் இல்லையே என்று கூறி புல்லட்சாமி அனுப்பிய கோப்பினை வந்த வழியாகவே திருப்பி விட்டாராம் வர்ம கலையின் பெயர் கொண்டவர். வேறு துறையின் சும்மா யாருக்கும் பயன்படாமல் இருக்கும் நிதியை எடுத்து போடுங்க என்று புல்லட்சாமி பதில் அனுப்பினாராம்.

அதற்கு ஒரு துறையின் நிதியை, மற்றொரு துறைக்கு மாற்றினால், அந்த துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டம் என்ன ஆவது என வர்ம கலையின் ெபயர் கொண்ட அதிகாரி கொக்கி போட்டிருக்கிறராம். திட்டம் துவக்கி வைக்கப்பட்டபோது ரூ.1000 கிடைத்தது, அதன்பிறகு மாதந்தோறும் கிடைக்கவில்லையென பெண்கள் சரமாரியாக புகார் சொன்னாங்களாம். நிலைமை இப்படி இருக்க பவர்புல் பெண்மணி இசை, அண்டை மாநிலத்தில் சரியாக திட்டத்தொகை கிடைத்ததற்கு, பிரதமர் எல்லோருக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்ததால் சென்று சேர்கிறது என்ற விமர்சனத்துக்கு எதிர்கட்சிகள் தாறுமாறான பதில் கொடுத்து பதிலடி கொடுத்தாங்களாம். இதனால் அப்செட்டாகி தற்போது இந்த விஷயத்தில் இசை அடங்கி கிடக்கிறாராம்.

முதலில் உங்க மாநிலத்தில் என்ன நடக்கிறது பாருங்கள் என டிவிட்டரில் வறுத்தெடுத்துவிட்டனராம். இதற்கிடையே புல்லட்சாமியிடம் போனில் நலம் விசாரித்த டெல்லி தாமரை தரப்பு, சந்தோஷம் தானே எனக்கேட்டாங்களாம். அதற்கு புல்லட்சாமி எங்கே சந்தோஷப்படுவது, ரூல்ஸ் ராமானுஜமாக இருக்கும் இந்த தலைமை செயலர் வர்ம கலையை தன்னுடன் வைத்துள்ளவரை மாற்றித்தொலையுங்கள். முடிந்தால் முழு நேர கவர்னரும், தலைமை செயலராக புதிதாக ஒருவரையும் நியமியுங்கள் எனக்கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தாராம்… அந்த அளவுக்கு கோபத்தை தாமரை தரப்பு இதுவரை பார்த்ததே இல்லையாம். விபூதி அடித்து இருப்பதால் சாந்த சொரூபியாக தான் பார்த்தாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரத்தில் தூக்கத்தை தொலைத்த துறையை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘தூங்கா நகர்’ மாவட்டத்தின் எல்லையில் ‘பாரை’, ‘ஆவல்’, எனத் துவங்கும் ஊர்கள், ‘குடி’ என முடியும் ஊர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச்சோதனை மையங்கள் உள்ளன. முத்துநகர் மாவட்டம் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. நிலக்கரி, காற்றாடி இறக்கை உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்கள் இதில் அடக்கம். இதில் ஓவர் லோடு வாகனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் மாமூல் கொடுத்து, உயர் காக்கிகளை கவனித்துசென்றன. இதனால் எத்தனை டன் கூடுதலாக இருந்தாலும் கண்டு கொள்ளவதில்லை. அதே நேரத்தில் ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட கேஸ்களை அதிகம் போட்ட காக்கிகள், ஓவர் லோடுகளை கண்டு கொள்ளாமலேயே விட்டு விட்டனர்.

ஆட்சி மாற்றத்திற்குப்பிறகு, இந்த வாகனங்கள் சோதனையில் தீவிரம் காட்டப்பட்டதால் இந்த விதிமீறல் தடுக்கப்பட்டது. இந்நிலையில் இலைக்கட்சி காலத்து ஆட்களில் சிலர் குறிப்பிட்ட வாகனச் சோதனைகளில் மீண்டும் பணியமர்ந்ததில், வசூல் நடத்தத் துவங்கி இருப்பது காவல் உயரதிகாரிகளுக்கு புகார்களாக குவிந்திருக்கிறது. குறிப்பாக, ‘குடி’ பகுதியில் பணிபுரியும் பெண் காக்கி, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் என்று கறார் வசூலில் கண்டிப்பு காட்டுகிறாராம். இந்த குறிப்பிட்ட வாகன சோதனை மையங்களில் ஓவர்லோடு வாகனங்கள் தினசரி ஆயிரக்கணக்கில் தூங்கா நகரைக் கடந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை அதிகாரிகள் நேரடி ஆய்வில் கண்டறிந்து, இதில் வருவாய் வசூல் பார்த்து வரும் இலைக்கட்சி ஆதரவாளர்களின் பட்டியலையும் சேகரித்து முடித்திருக்கிறார்கள். வெகு விரைவில் அதிரடி நடவடிக்கைகள் பாய இருக்கிறதாம். அதை கேட்டதில் இருந்து அந்த பெண் அதிகாரி தூக்கத்தை தொலைத்து பெரிய அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தூது விட்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியை சேர்ந்த பிரமுகரின் வாய்ஸ் மெசேஜால் என்ன ஆச்சு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மீன்துறை அதிகாரிகள், மாவட்ட உயர் அதிகாரி உள்ளிட்டோர் கமிஷன் பெற்றுள்ளனர் என்று இலை கட்சியை சேர்ந்த மேற்கு மாவட்ட மீனவர் அணி நிர்வாகி ஒருவர் ஓப்பனாக சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாராம். மேலும் இந்த விஷயத்தில் அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என்று சக மீனவர்களையும் தூண்டி வருகிறாராம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி இவர் போராட்டத்தை தூண்டுவது ஏன், எதனையாவது கூறி நடந்துகொண்டிருக்கின்ற பணியையும் தடுத்து முடக்கிவிடக்கூடாது என்பது சக மீனவர்களின் கவலையாக இருக்கிறதாம். எல்லாம் கமிஷனை எதிர்பார்த்துதான் இந்த கலக வேலையை இலை கட்சி பிரமுகர் துவக்கி உள்ளதாக மீனவர்கள் தரப்பில் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post ரூல்ஸ் போட்டு நோகடிக்கும் அதிகாரியை மாற்ற கோரும் புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullatsamy ,wiki Yananda ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...